புதன், 14 ஏப்ரல், 2010

தொலைந்து போகின்றேன்...

ஊர் உறங்கும் வேளையிலே

ஊரை விட்டு உறவை விட்டு வந்த நாட்கள்

பசுமரத்தாணி போல் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே !

காதலித்து தான் பார்ப்போமே என்று

ஆரம்பிக்கும்போது கண்ணில் கண்டதெல்லாம்

கனவிலே வந்து சென்றது !

கனவிலே வந்த‌து கண்களில் தென்பட்டபோது

காதல் அவள் காலடியில் கிடந்தது !

ஒரு நொடி பார்த்திருப்பாயா என்னை?

அந்தப் பார்வையிலேயே சிக்கி

சின்னாபின்னமாயின நினைவுகள் !

ஆனால் சின்னம் மட்டுமே இப்போது !

எப்போதோ ஒருமுறை வந்து செல்லும்

நிலநடுக்கம் போல வந்து சென்றுவிட்டாள் !

எப்போதும் அவளின் நினைப்பிலேயே இருக்குமாறு

நினைவைக் கொன்றுவிட்டாள் !

அவள் தேடி வந்தேன் இங்கு - ஆனால்

என்னவள் தேடியே தொலைகின்றேன் இன்று !

செவ்வாய், 23 மார்ச், 2010

தோழி...

சில நாட்கள் தான் பழகிய என் தோழி என்னைவிட்டுப் பிரிந்து சென்ற போது தோன்றியது

நாட்கள் சிலதான் என்றாலும்... நட்பின் ஆழம் பெரியது அதனினும் பிரிவு என்பது கொடியது...

அன்புத்தோழியே !

நான் இங்கு எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்

நம் நினைவுகளை நினைப்பிக்கும்

வார்த்தைக்குவியலாய் !

நீ எடுத்த புகைப்படம்

உன் வீட்டு உணவு

முதல் நாள் மோட்டார் சைக்கிள் பயணம்

நண்பர்களின் வீடுகள்

சாப்பிட்டு மகிழ்ந்த கையேந்தி பவன்கள்

நான் சிலாகிக்கும் உன் தோழி

காலாற நடந்த நடைகள்

ஏறி இறங்கி

எதுவும் வாங்காமல் திரும்பிய கடைகள்

இரவு நேர தொலைபேசி அழைப்புகள்

எனக்காக நீ சண்டையிட்ட நாட்கள்

உன்னை நான் விய்ந்து பார்த்த நாட்கள்

என் காதலி பிரிந்து சென்ற போது

என்னைத்தேற்றிய அந்த நிமிடம்

உன் நெஞ்சில் முகம் புதைத்து அழுத நாள்

வானம் தொட்டுவிட சிரித்த நாட்கள்

நனைந்ததும் முடிந்த மழை

நீ வாசித்த என் முதல் கவிதை !

இன்னும் எத்தனையோ !

கடந்த காலம் அனைத்தும்

இனிப்பாகவே இருந்திருக்கின்றது !

நினைவுகள் உயிர்ப்பெறும் வேளையில்

நிகழ்காலம் கசக்கிறது

நீ அருகில் இல்லாததால் !

தொலைவுகள் தொலைந்துபோகும் நேரம்

தொலைவில் இல்லை !

மறக்க நினைக்கிறேன்

நினைக்க மறக்காமலிருப்பதற்காக !

எப்போதும்

என் முகத்தை எடுத்துக்காட்டும்

கண்ணாடியாகவே இருந்திருக்கின்றாய் !

மன்னித்துவிடு என்னை

எப்போதாவது கண்ணாடி மீது கல்லெறிந்திருந்தால் !

நீ என்னிடம் பேசியதை விட

எனக்காக பேசியதே அதிகம் !

கிறுக்கப்பட்டிருந்த என் மனதை

வெண்மையாக்கினாய் !

வெண்மையாய் இருந்த என் மனதில்

நட்பைக் கிறுக்கிவிட்டு செல்கிறாய் !

என்னையும்

ஒரு கவிஞன் என அங்கீகரித்த

முதல் உயிர் நீ !

என் உள்ளத்தின் திரியை

ஏற்றிவிட்ட தூண்டுகோல் நீ !

எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள்

நாம் நண்பர்கள் தான் என்று

நாம் ஒரே வண்டியில் செல்கையிலே?

எவ்வளவோ எழுதலாம் நம் நட்பைப்பற்றி

நான் உனக்காக எழுதியவைகளை

எப்போதுமே முடித்ததில்லை

அனைத்துமே முற்றுப்பெறா தொடர்கள் !

நான் மறந்திருக்கலாம்

சிலவற்றை நினைப்பிக்க -

நினைப்பிருந்தால்

நிரப்பிக்கொள்ளவே வெள்ளைத்தாள் !

எப்போதாவது

என்னை நினைக்க நேர்ந்தால்

அனுப்பிடு ஒரு மின்னஞ்சல் !

ஒவ்வொரு கணமும் யுகமாய்...

உன்னிடமிருந்து சேதி வரும் வரை...

வாழ்த்துக்கள் உன் நண்பனிடமிருந்து...

சனி, 20 மார்ச், 2010

நேற்று...

எங்கேயோ கேட்டதும், பகிந்துகொள்ள வேண்டும் என நினைத்தவைகளும் இங்கே...

நான் முடி வெட்டுவதற்காக நேற்று சலூன் சென்றிருந்தேன். எப்போதுமே நீங்கள் கவனித்தீர்களென்றால் ஒன்று புரியும். முடி திருத்துபவர்கள் ஏதாவது பேசிக்கொண்டே தனது வேலையை செய்வார்கள். நான் வழக்கமாக செல்பவரும் அப்படித்தான். எதுவுமே சம்பந்தமே இல்லையென்றாலும் அவர் பேசிக்கொண்டேதான் இருப்பார்.

எத்தனையே விஷயங்களை இதுவரை சொல்லியிருப்பார். ஆனால் நேற்று அவர் பேசியது கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இதோ அவர் பேசியது....

சார் எனக்கு கார் ஒட்றது தான் சார் ரொம்ப புடிக்கும், ஆனா என் தோஸ்து என்னிக்கி ஆக்சிடண்ட்ல போனானோ அன்னிக்கே இந்த வேலய விட்டுடணும்னு தோணிச்சு சார். அவன் தான் எனக்கு குரு, கத்துக்கொடுத்தது எல்லாமே அவன் தான். அப்புறமா நான் இங்க சலூன் வச்சிட்டு வந்துட்டேன்.

யோசிக்க ஆரம்பிச்சேன் அப்போவே... உயிர்னா அவ்வளவு பயம் வருதே, என்ன காரணம்?

அவரு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு வாட்டி பெங்களூர்ல இருந்து பாண்டிச்சேரி போயிட்டு இருந்தோம் சார். ஒரு எட்டு பசங்க வண்டில இருந்தாங்க... அவங்க எல்லாம் நல்லா ஜாலியா சரக்கு எல்லாம் அடிச்சிட்டு வந்தாங்க... என்ன குடிக்க சொன்னதுக்கு, இல்லப்பா, பாண்டிச்சேரி போயிட்டு எவ்ளோ வேணும்னாலும் அடிக்கிறேன், தொழில்ல இருக்கும்போது இதெல்லாம் நான் பண்றதில்லனு சொல்லிட்டேன்.

ஜாலியா இருக்கும்போது ஜாலியா இருக்கணும், வேலை செய்யும்போது வேலை செய்யணும் சார்.

ஜஸ்ட் அப்போதான் திண்டிவனம் தாண்டி போயிட்டு இருந்தோம். ஒரு எட்டு பசங்க நாலு டூ வீலர்ல வந்தானுங்க... என்னா ஸ்பீடுங்கிறீங்க... என்னயே ஒரு காட்டு காட்டிட்டு போயிட்டானுங்க. நான் சைடு கொடுத்ததுக்கு அப்புறம், ரெண்டு பேரு முன்னாடி அப்புறம் ரெண்டு பேரு பின்னாடி வர ஆரம்பிச்சுட்டாங்க, என்னை முன்னாடியும் போக விடல அவனுங்களும் முன்னாடி போகல. லாக் பண்ணின மாதிரி ஆயிடுச்சு. நானும் பொறுமையா போயிட்டே இருந்தேன், ஒரு ஸ்டேஜ்ல முடியல. சரின்னு வாய்ப்ப எதிர் பார்த்துகிட்டே போயிட்டு இருந்தேன். ஒரு பதினஞ்சு கிலோமீட்டர் அவனுங்க பின்னாடியே போனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரைட்லா ஏறிட்டே போனேன், அவனுங்களும் ஏறிட்டே வந்தானுங்க, இதுதான் டைம்னு ரைட்ல ஒரு ஒடி ஒடிச்சேன் பாருங்க, அவ்ளோதான், ரெண்டு பைக்கும் அப்பிடியே சினிமாவுல பறக்குற மாதிரி பறந்து போய் விழுந்தாங்க சார். வண்டிய நான் நிறுத்தவே இல்ல, ஒரு இருபது கிலோமீட்டர் தாண்டி, வண்டிய நிறுத்திட்டு, வண்டிக்கு ஏதாவது அடி பட்டிருக்கானு பாத்துட்டு கிளம்பிட்டேன்... நம்மகிட்டயேவா அவனுங்க டகால்டி காட்ட பாத்தானுங்க, நான் ஒரு காட்டு காட்டிட்டேன், கண்டிப்பா ஒரு பெரிய அடி விழுந்திருக்கும் இல்ல போய் சேர்ந்திருக்கிறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. இது மாதிரி எத்தனயோ சார், இந்த டூ வீலர்காரனுங்க தான் சார் இப்பிடி அநியாயம் பண்ணுறானுங்க.

இதுமாதிரி இன்னும் இரண்டு சம்பவமும் சொல்லிக்கொண்டே, எனது முக சவரத்தையும் முடித்தார்.

அங்கிருந்து எழுந்து வந்ததிலிருந்து என் மனம் ஏனோ சரியில்லை. இதில் நான் யாரை குற்றம் சொல்ல முடியும்? நான் ஒரு பைக் வைத்திருப்பதால், எனக்கு அவர் மேல்தான் வெறுப்பு வந்தது, ஆனால் அவர் நிலையிலிருந்து என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

ஆனாலும் அவர் செய்தது நியாயமாக தெரியவில்லை. ஒரு உயிர் போனதினால் தனது தொழிலையே மாற்றிக்கொள்ள துணிந்த ஒரு மனிதனால், தான் ஒரு உயிருடன் விளையாடுகின்றோமே என்கின்ற ஒரு உணர்வு ஏன் வரவில்லை?

ஒரு முறை இதுவும் உயிர்தான் என்ற எண்ணம் வந்திருந்தாலே போதுமே, ஏன் தனக்கு தெரிந்தவர்கள் அல்லது தனது ரத்த சொந்தங்கள் ஏதாவது ஆபத்தில் இருந்தால் மட்டும்தான் மனம் பதைபதைக்க வேண்டுமா? அனைவரையும் சமமாக நினைக்கும் மனோபாவம் நமக்கு எப்போது வரும்?

எப்போது வரும் என்பதை விட, எப்போதாவது வருமா?

வியாழன், 16 ஏப்ரல், 2009

மறக்க நினைக்கின்றேன்!

என்னை மறந்துவிடு
நீ சொல்லிய வார்த்தை
நெரிஞ்சி முள்ளாய் நெஞ்சில் !

மறக்கத்தான் முயற்சிக்கின்றேன்!
ஆனால்

அடிபட்ட அணில்
ஆத்மார்த்தமான இசை
இரவு நேர வெண்ணிலா
ஈரமான ரோஜா
உண்மை சொல்லும் மழலை
ஊமையான இரவுகள்
எல்லையில்லாக் கடல்
ஏக்கமான நினைவுகள்
ஐந்து விரல் ஸ்பரிசம்
ஒற்றையடிப் பாதை
ஓரக்கண் பார்வை
ஔவையின் சொற்கள்

எது பார்க்கும் போதும்
நீ தானே வந்து செல்கிறாய்
என் நினைவில் !


எதை மறந்து விட்டு
வாழச்சொல்கிறாய் என்னை ?

உயிரை மட்டும் எடுத்து விடு !

வேண்டாம் வேண்டாம் !

இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் !
ஆனால்
மூளை வேலை செய்யாமல் தடுக்க வேண்டியது
உன் பொறுப்பு !

செவ்வாய், 3 மார்ச், 2009

பிரியா விடை...

நீ இருந்த பொழுதெல்லாம்
நில்லாமல் சென்ற என் மனது
இப்போது நீ இருந்த இடங்களில் எல்லாம்
நின்றே செல்கின்றது
நீ எனக்கு எட்டா தூரம்
மூளை நினைத்தாலும் இதயம் மறுக்கின்றது
அனைத்தும் உணர்ந்துகொண்டு
வெறுமையாய் ஒரு புன்னகை பூக்கையிலே
எக்காளமிட்டு சிரிக்கின்றது நீ அமர்ந்திருந்த இருக்கை!

சனி, 3 ஜனவரி, 2009

கடற்கரை நினைவுகள்

அந்தி வேளை கடற்கரையில்
அலைகளை ரசிக்கும் போதும்
வெட்கத்தினால் சிவந்து கொள்வாய் !
நீயும் கடலும் ஒன்றுதானடி என்று
நான் சொல்லியது போல்
இப்போது சொல்ல முடியவில்லை
முகம் ஏன் சிவந்திருக்கிறது என்று கேட்கும்
என் மனைவியிடம் !

எப்போதும் கைகோர்த்தபடியே நடந்து சென்ற
கடற்கரை வழியே
தனியே நடந்து செல்கின்றேன் !
நீ எங்கே எனக் கேட்கும் அலைகளிடம் சொல்லிவருகிறேன்
இப்போது
நினைவுகளில் மட்டுமே நீ - என்று
நிஜத்தில் தொலைந்து போன நான் !

கடற்கரையில்
உன்னிடம் காட்டிய கவிதைகள் அனைத்தும்
கனவுகளில் கூட வந்து நினைப்பிக்கின்றன !
நாம் அமர்ந்திருந்த இடத்தில்
நீ அமர்ந்திருந்த போது
உன் கணவனுடன் !


வெள்ளி, 24 அக்டோபர், 2008

நீ!

நீ எனக்கு
எழுதப்படாத கவிதை !
நனையாத மழை !
பேசாத வார்த்தை !
ரசிக்காத ஓவியம் !
வீசாத தென்றல் !
காணாத கனவு !
பரிமாறாத‌ முத்தம் !
நடக்காத‌ பாதை !
எடுக்காத புதையல் !
சிதறாத புன்னகை !
வாழாத ஒரு வாழ்க்கை !