செவ்வாய், 23 மார்ச், 2010

தோழி...

சில நாட்கள் தான் பழகிய என் தோழி என்னைவிட்டுப் பிரிந்து சென்ற போது தோன்றியது

நாட்கள் சிலதான் என்றாலும்... நட்பின் ஆழம் பெரியது அதனினும் பிரிவு என்பது கொடியது...

அன்புத்தோழியே !

நான் இங்கு எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்

நம் நினைவுகளை நினைப்பிக்கும்

வார்த்தைக்குவியலாய் !

நீ எடுத்த புகைப்படம்

உன் வீட்டு உணவு

முதல் நாள் மோட்டார் சைக்கிள் பயணம்

நண்பர்களின் வீடுகள்

சாப்பிட்டு மகிழ்ந்த கையேந்தி பவன்கள்

நான் சிலாகிக்கும் உன் தோழி

காலாற நடந்த நடைகள்

ஏறி இறங்கி

எதுவும் வாங்காமல் திரும்பிய கடைகள்

இரவு நேர தொலைபேசி அழைப்புகள்

எனக்காக நீ சண்டையிட்ட நாட்கள்

உன்னை நான் விய்ந்து பார்த்த நாட்கள்

என் காதலி பிரிந்து சென்ற போது

என்னைத்தேற்றிய அந்த நிமிடம்

உன் நெஞ்சில் முகம் புதைத்து அழுத நாள்

வானம் தொட்டுவிட சிரித்த நாட்கள்

நனைந்ததும் முடிந்த மழை

நீ வாசித்த என் முதல் கவிதை !

இன்னும் எத்தனையோ !

கடந்த காலம் அனைத்தும்

இனிப்பாகவே இருந்திருக்கின்றது !

நினைவுகள் உயிர்ப்பெறும் வேளையில்

நிகழ்காலம் கசக்கிறது

நீ அருகில் இல்லாததால் !

தொலைவுகள் தொலைந்துபோகும் நேரம்

தொலைவில் இல்லை !

மறக்க நினைக்கிறேன்

நினைக்க மறக்காமலிருப்பதற்காக !

எப்போதும்

என் முகத்தை எடுத்துக்காட்டும்

கண்ணாடியாகவே இருந்திருக்கின்றாய் !

மன்னித்துவிடு என்னை

எப்போதாவது கண்ணாடி மீது கல்லெறிந்திருந்தால் !

நீ என்னிடம் பேசியதை விட

எனக்காக பேசியதே அதிகம் !

கிறுக்கப்பட்டிருந்த என் மனதை

வெண்மையாக்கினாய் !

வெண்மையாய் இருந்த என் மனதில்

நட்பைக் கிறுக்கிவிட்டு செல்கிறாய் !

என்னையும்

ஒரு கவிஞன் என அங்கீகரித்த

முதல் உயிர் நீ !

என் உள்ளத்தின் திரியை

ஏற்றிவிட்ட தூண்டுகோல் நீ !

எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள்

நாம் நண்பர்கள் தான் என்று

நாம் ஒரே வண்டியில் செல்கையிலே?

எவ்வளவோ எழுதலாம் நம் நட்பைப்பற்றி

நான் உனக்காக எழுதியவைகளை

எப்போதுமே முடித்ததில்லை

அனைத்துமே முற்றுப்பெறா தொடர்கள் !

நான் மறந்திருக்கலாம்

சிலவற்றை நினைப்பிக்க -

நினைப்பிருந்தால்

நிரப்பிக்கொள்ளவே வெள்ளைத்தாள் !

எப்போதாவது

என்னை நினைக்க நேர்ந்தால்

அனுப்பிடு ஒரு மின்னஞ்சல் !

ஒவ்வொரு கணமும் யுகமாய்...

உன்னிடமிருந்து சேதி வரும் வரை...

வாழ்த்துக்கள் உன் நண்பனிடமிருந்து...

கருத்துகள் இல்லை: