சனி, 20 மார்ச், 2010

நேற்று...

எங்கேயோ கேட்டதும், பகிந்துகொள்ள வேண்டும் என நினைத்தவைகளும் இங்கே...

நான் முடி வெட்டுவதற்காக நேற்று சலூன் சென்றிருந்தேன். எப்போதுமே நீங்கள் கவனித்தீர்களென்றால் ஒன்று புரியும். முடி திருத்துபவர்கள் ஏதாவது பேசிக்கொண்டே தனது வேலையை செய்வார்கள். நான் வழக்கமாக செல்பவரும் அப்படித்தான். எதுவுமே சம்பந்தமே இல்லையென்றாலும் அவர் பேசிக்கொண்டேதான் இருப்பார்.

எத்தனையே விஷயங்களை இதுவரை சொல்லியிருப்பார். ஆனால் நேற்று அவர் பேசியது கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இதோ அவர் பேசியது....

சார் எனக்கு கார் ஒட்றது தான் சார் ரொம்ப புடிக்கும், ஆனா என் தோஸ்து என்னிக்கி ஆக்சிடண்ட்ல போனானோ அன்னிக்கே இந்த வேலய விட்டுடணும்னு தோணிச்சு சார். அவன் தான் எனக்கு குரு, கத்துக்கொடுத்தது எல்லாமே அவன் தான். அப்புறமா நான் இங்க சலூன் வச்சிட்டு வந்துட்டேன்.

யோசிக்க ஆரம்பிச்சேன் அப்போவே... உயிர்னா அவ்வளவு பயம் வருதே, என்ன காரணம்?

அவரு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு வாட்டி பெங்களூர்ல இருந்து பாண்டிச்சேரி போயிட்டு இருந்தோம் சார். ஒரு எட்டு பசங்க வண்டில இருந்தாங்க... அவங்க எல்லாம் நல்லா ஜாலியா சரக்கு எல்லாம் அடிச்சிட்டு வந்தாங்க... என்ன குடிக்க சொன்னதுக்கு, இல்லப்பா, பாண்டிச்சேரி போயிட்டு எவ்ளோ வேணும்னாலும் அடிக்கிறேன், தொழில்ல இருக்கும்போது இதெல்லாம் நான் பண்றதில்லனு சொல்லிட்டேன்.

ஜாலியா இருக்கும்போது ஜாலியா இருக்கணும், வேலை செய்யும்போது வேலை செய்யணும் சார்.

ஜஸ்ட் அப்போதான் திண்டிவனம் தாண்டி போயிட்டு இருந்தோம். ஒரு எட்டு பசங்க நாலு டூ வீலர்ல வந்தானுங்க... என்னா ஸ்பீடுங்கிறீங்க... என்னயே ஒரு காட்டு காட்டிட்டு போயிட்டானுங்க. நான் சைடு கொடுத்ததுக்கு அப்புறம், ரெண்டு பேரு முன்னாடி அப்புறம் ரெண்டு பேரு பின்னாடி வர ஆரம்பிச்சுட்டாங்க, என்னை முன்னாடியும் போக விடல அவனுங்களும் முன்னாடி போகல. லாக் பண்ணின மாதிரி ஆயிடுச்சு. நானும் பொறுமையா போயிட்டே இருந்தேன், ஒரு ஸ்டேஜ்ல முடியல. சரின்னு வாய்ப்ப எதிர் பார்த்துகிட்டே போயிட்டு இருந்தேன். ஒரு பதினஞ்சு கிலோமீட்டர் அவனுங்க பின்னாடியே போனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரைட்லா ஏறிட்டே போனேன், அவனுங்களும் ஏறிட்டே வந்தானுங்க, இதுதான் டைம்னு ரைட்ல ஒரு ஒடி ஒடிச்சேன் பாருங்க, அவ்ளோதான், ரெண்டு பைக்கும் அப்பிடியே சினிமாவுல பறக்குற மாதிரி பறந்து போய் விழுந்தாங்க சார். வண்டிய நான் நிறுத்தவே இல்ல, ஒரு இருபது கிலோமீட்டர் தாண்டி, வண்டிய நிறுத்திட்டு, வண்டிக்கு ஏதாவது அடி பட்டிருக்கானு பாத்துட்டு கிளம்பிட்டேன்... நம்மகிட்டயேவா அவனுங்க டகால்டி காட்ட பாத்தானுங்க, நான் ஒரு காட்டு காட்டிட்டேன், கண்டிப்பா ஒரு பெரிய அடி விழுந்திருக்கும் இல்ல போய் சேர்ந்திருக்கிறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. இது மாதிரி எத்தனயோ சார், இந்த டூ வீலர்காரனுங்க தான் சார் இப்பிடி அநியாயம் பண்ணுறானுங்க.

இதுமாதிரி இன்னும் இரண்டு சம்பவமும் சொல்லிக்கொண்டே, எனது முக சவரத்தையும் முடித்தார்.

அங்கிருந்து எழுந்து வந்ததிலிருந்து என் மனம் ஏனோ சரியில்லை. இதில் நான் யாரை குற்றம் சொல்ல முடியும்? நான் ஒரு பைக் வைத்திருப்பதால், எனக்கு அவர் மேல்தான் வெறுப்பு வந்தது, ஆனால் அவர் நிலையிலிருந்து என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.

ஆனாலும் அவர் செய்தது நியாயமாக தெரியவில்லை. ஒரு உயிர் போனதினால் தனது தொழிலையே மாற்றிக்கொள்ள துணிந்த ஒரு மனிதனால், தான் ஒரு உயிருடன் விளையாடுகின்றோமே என்கின்ற ஒரு உணர்வு ஏன் வரவில்லை?

ஒரு முறை இதுவும் உயிர்தான் என்ற எண்ணம் வந்திருந்தாலே போதுமே, ஏன் தனக்கு தெரிந்தவர்கள் அல்லது தனது ரத்த சொந்தங்கள் ஏதாவது ஆபத்தில் இருந்தால் மட்டும்தான் மனம் பதைபதைக்க வேண்டுமா? அனைவரையும் சமமாக நினைக்கும் மனோபாவம் நமக்கு எப்போது வரும்?

எப்போது வரும் என்பதை விட, எப்போதாவது வருமா?

1 கருத்து:

Jeyaganesh T S சொன்னது…

Most of the Barbers are like that. But I can tell you strongly, most of the times what they utter were just not true. He might had exaggerated both incidents, his career change and mock chasing. payapulla poi soltan pola irukku. :)