வெள்ளி, 24 அக்டோபர், 2008

நீ!

நீ எனக்கு
எழுதப்படாத கவிதை !
நனையாத மழை !
பேசாத வார்த்தை !
ரசிக்காத ஓவியம் !
வீசாத தென்றல் !
காணாத கனவு !
பரிமாறாத‌ முத்தம் !
நடக்காத‌ பாதை !
எடுக்காத புதையல் !
சிதறாத புன்னகை !
வாழாத ஒரு வாழ்க்கை !

சனி, 11 அக்டோபர், 2008

பச்சோந்தி

மற்றவர் உதவி கேட்கும்போது செவிடன்
அநீதி நடக்கும் இடத்தில் குருடன்
அவலங்களைத் தட்டிக்கேட்கும் போது ஊமை
அநியாயக்காரர்களை துரத்தும் போது முடவன்
எத்தனை வேடங்கள் போட்டாலும்
சமூகத்தின் முன் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதன் !
பச்சோந்தி என்பது விலங்கினங்களிடம் மட்டும்தானோ?

ஞாபகம் வருதே...

எப்போதும் மழை நனையும் போதும்
கடல் பார்க்கும் போதும்
நிலவு ரசிக்கும் போதும்
குழந்தை சிரிக்கும் போதும்
கவிதை வாசிக்கும் போதும்
உன் முகம்தானடி
என் கண் முன்னே வந்து செல்கிறது !
அப்போது வரும் புன்னகையைக்கண்டு
ஏன் என்று கேட்கும் என் மனைவிக்கு
என்ன பதில் சொல்ல?

வியாழன், 18 செப்டம்பர், 2008

அன்னை

இந்தக் கடவுள்
என் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் !
இல்லையென்றால்
உன்னைப்போல் மிக உயர்ந்த பரிசை
வழங்கியிருப்பானா எனக்கு ?
என் அன்னையாக !

இனியவளே!

என்னடி என் இனியவளே!
கனவு காண கற்றுக் கொடுத்த நீ
என் உறக்கத்தைக் களவாடிச் சென்றுவிட்டாயே !
இது நியாயமா?

வியாழன், 11 செப்டம்பர், 2008

ஜன்னல்

என்னவளே !
ஜன்னல் வழியே எட்டிப்பார்க்காதே மழையை !
உன்னைத் தீண்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில்
கண்ணீராய் வழிகிறது மழைத்துளி
ஜன்னலில் !

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

ஞாபகம்

யாருமில்லா கடற்கரை !
வேடிக்கை பார்க்க நிலவும் வானமும் !
கொஞ்சி குலாவிட நண்டுகளின் நடனமும் !
கேட்டு ரசித்திட வண்டுகளின் ரீங்காரமும் !
பார்த்து மகிழ்ந்திட அலைகளின் முயற்சியும் !
நெஞ்சம் சில்லிட வீசும் காற்றும் !
எங்கேயோ தூரத்தில் கேட்கும் மீனவனின் படகு சத்தமும் !
எல்லாவற்றையும் விட மேலாக தூறும் சாரலும் !
ஆனாலும்,
எதையுமே ரசிக்க முடியாமல்
கண்ணை மறைப்பது போல
கடைசியாக உன் கணவனோடு
நான் உன்னைப் பார்த்த ஞாபகங்கள்
இதே கடற்கரையில் !

நான் உன் அடிமை

எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி என்னை வாட்டி வதைக்க ?

சென்ற பிறவியில் வேடனாக இருந்திருப்பாயோ
என் மனதை
வேட்டையாடிச் சென்றுவிட்டாய்
முதல் பார்வையிலேயே !

உன்னைச் சிந்தித்தே என் நாட்கள் நீளுகிறது !
எப்போதாவது வந்து என்னிடம்
பேசி விட்டு போய் விடுகிறாய் - ஆனால்
நீ பேசியவை அனைத்துமே
எனது கவிதை தொகுப்பாய் !

கரை கடக்க முயற்சிக்கிறேன்
ஆனால் புயலாய் என்னை சுருட்டி சுவைத்து விடுகிறாய் !

இரண்டு நாட்களாக காணவில்லை
என் கண்மனியை !
என்ன ஆயிற்றோ எங்கு சென்றாளோ ?
இருப்புக்கொள்ளவில்லை என் மனதிற்கு
எத்தனை முறை அவள் வீடு கடந்து செல்வது ?
யாரிடமும் கேட்கவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஒரு ஆனந்த அவஸ்தை !

நீ நின்று கொண்டிருந்த இடங்களில் எல்லாம்
மணிக்கணக்கில் நின்று செல்கிறது என் மனது !

இன்று வந்துவிட்டாள் என் தேவதை !
உன்னைப் பார்க்கும் முன்னே நத்தையாக நகன்ற நேரம்
உன்னைக்கண்டதும் இறக்கை கட்டிப் பறக்கிறதே !


என்னடி மாயம் செய்கிறாய் என் செல்லமே ?
எப்போதும் உன் நினைவுகளைச் சுமக்கும்
ஒரு சுமையாகவே என் மனது !
சுமை மட்டுமல்ல சுகமான சுமை
எங்கும் சென்று விடாதே என்னிடம் சொல்லாமல் !

என் மனதை மீட்டு விட வேண்டும்
என்ற முயற்சியில் நான் !
எப்படியாவது உன் நினைவுகளின் மயக்கத்திலிருந்து
மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் !
அதுவரை . . .
உன் நினைவுகளின் அடிமை !

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008

வாழ்த்துக்கள்

நண்பா உனக்கு நாளை பிறந்த நாள் !

அது வரை நான் உயிரோடு இருப்பேனா என்பதே
எனக்கு சந்தேகம் தான்,
இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் போது
நீ எனது உடலை வாங்க விரைந்துகொண்டிருப்பாய் . . .

ஆம் !
நான் மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன் !
அதில் எனக்கு துளியும் வருத்தமில்லை என் நண்பா !
ஆனால் என்ன
என்னால் உன்னைக்காண முடியவில்லையே
என்ற வருத்தம் மட்டும் தான் !

நீயும் நானும் தான் ஒன்றாக முயற்சித்தோம்
நமது பாரதத்தின் ராணுவத்தில் பணியாற்ற -
ஆனால், நீ ஒரே மகனாகப் போய் விட்டதால்
நாட்டை விட உன் வீட்டைக் காக்கும் பொறுப்பு உனக்கு !
உனக்கும் சேர்த்துதானேடா இந்த இடத்திற்கு நான் வந்தேன் !
எப்படியடா உனக்கு நன்றி சொல்ல?
இப்படியொரு வாய்ப்பை நீ வழங்கியதற்கு

நமது பால்ய நினைவுகள் அனைத்தும்
என் கண் முன்னே ஓடி மறைகிறது இப்போது !
அனைத்து நிகழ்வுகளும் ஆனந்தமாகவே இருந்திருக்கிறது !
எத்தனை கனவுகள் !
எத்தனை ஆசைகள் !
கனவுகள் உயிர்ப்பிக்கும் வேளையில்
எனக்கு இப்படி ஒரு பாக்கியம்
தேசத்திற்காக வேறு உலகம் செல்கிறேன் !

ஆறு மணி நேரத்திற்கு முன்
எதிரி என் இடுப்பில் சுட்டது கூட நினைவில்லை
எனக்கு இப்போது !
ஆனால்,
ஆறு மாதத்திற்கு முன்னால்
உன் மழலை பேசிய மொழி,
இன்னும் ஒலிக்கிறதடா என் காதுகளில் !

எனது அம்மா அப்பாவை நீதானடா பார்த்துக்கொள்ள வேண்டும்
இப்படிக்கேட்கக் கூடாது என்று தானடா நான் நினைத்தேன் !
கேட்பது நட்பிற்கு இழுக்கு என்று நினைப்பவர்கள் நாம் !
ஆனாலும் மனது கேட்கவில்லை,

முக்கியமான ஒன்று !
உனக்கு நன்றாகவே தெரியும்
என் அத்தை மகளைப் பற்றி,
அவளுக்கு ஆறுதல் கூற யாராலும் முடியாது
உன்னைத் தவிர !

நாட்டைக் காப்பதற்காக உயிரை விடுவது
எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா ?

எல்லாம் நீ கொடுத்த வரம் !
எப்போதும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேனடா நான் !

எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
அப்போதும் நீ என் நண்பனாக கிடைத்திட
வரம் வேண்டுகிறேனடா
இருப்பது தெரியாத கடவுளிடம் !
என் ஆயுளையும் சேர்த்து
நீ வாழ பிரார்த்திக்கிறேன் அவரிடமே !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் நண்பா!

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

புன்னகை பூவே !

என் கனவுப்பூவாய் ஆனவளே !
என்னதான் ஆனதோ என் மனதிற்கு

முழுவதாக கொடுத்துவிடத்தான் நினைக்கிறேன் உன்னிடம்,
நீயாவது எடுத்துக் கொண்டிருக்கலாம்!
ஆனால் அதுவும் இல்லை !

எங்கேயும் எப்போதும் தொட்டுவிடும் தூரத்தில் நீ ...
ஆனால்
கை நீட்டுகையில் கரைந்து போகிற நுரையாய் !

கரைந்து போனாலும்
மனதைக் கரைப்பது போல உன் நினைவுகள்
என் நெஞ்சில் ஈரமாய் !

எப்படித்தான் பார்த்துக்கொண்டாலும்
உன் பின்னாலேயே சுற்றும் காற்றாய்
என் மனது !

தொலைத்துவிடத்தான் ஆசைப்படுகிறேன்
இப்படி சொல் பேச்சு கேட்காத என் மனதை !

எனக்காக ஒரு வேண்டுகோள் உன்னிடத்தில்
வந்துவிடுவாயா எனக்காக?

பலருக்கு தேவதையாக இருக்கலாம் நீ !
ஆனால்,
எனக்கு நீ மட்டும்தானே தேவதை !

உன்னிடம் வரம் கேட்டு,
கையேந்தி இல்லையில்லை
இதயமேந்தி நிற்கிறேன் என் கைகளில்!

மற்றவர்கள் கேட்பது போல
நான் உன் இதயத்தை கேட்கவில்லை பதிலுக்கு !
ஆனால் ,
ஒரு புன்னகை மட்டுமாவது கொடு
அதுபோதும் எனக்கு!

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

வரமா சாபமா?

என்ன ஒரு தருணம் இது
வரமா சாபமா?

நான் என் காதலியைக் காண்கிறேன்
பத்து வருடங்கள் கழித்து
எங்களது கண்கள் சந்தித்துக் கொண்டதும்
மனங்கள் பரிமாற ஆரம்பித்துவிட்டன உள்ளக்குமுறல்களை

“ எத்தனை வருடங்கள் ஓடி விட்டன
நம் கண்கள் சந்தித்து
எங்கிருந்தாய் எப்படியிருந்தாய்
எதுவுமே தெரியாமலேயே ” - நான்

“ உன்னுடன் வருபவர் யார்
அவர்தான் உன் கணவரா ”

‘ஆம், அவனைத்தான் உனக்குப் பதிலாக
என்னிடம் பிடித்துக்கொடுத்தனர் என் பெற்றோர்
நாவிலே நஞ்சுள்ளவன் !
சந்தேகத்தின் சகோதரன்! ’ - அவள்

“ என்ன ஆயிற்று உனக்கு?
மனதை ஒருமுகப்படுத்து !
யாரது உனது கையைப்பிடித்துக் கொண்டு
உன் குழந்தையா?
உன் ஜாடையிலேயே உள்ளதே ! ”

‘ ஆம் இவள் என் மகள் ’

“ தேவதை பெற்றெடுத்த திருமகள் ”

‘ எனக்கும் இந்த மாமிச மிருகத்தின்
உறவுக்கும் சாட்சி ’

“ என்ன இது
வாழ்க்கையை வெறுத்தது போல் பேசுகிறாய் ”

‘ வெறுத்தது வாழ்க்கையை மட்டுமல்ல
அனைத்தையும் தான்
உன்னைத்தவிர !
சரி விடு என் கதையை,
எங்கே உனது துணை ? ’

“ எனக்குத் துணையா?
என்ன வேண்டும் எனக்கு,
உன் நினைவுகளைத் தவிர ?
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளுடனேயே ! ”

‘ நானும் தான்
உன் நினைவுகளின் சந்தோஷங்களில்
கொஞ்ச நாள் வாழ்ந்துகொண்டிருந்தேன் !
இப்போது நினைத்துப் பார்த்தால்
விரல் விட்டு எண்ணி விடலாம்
சந்தோஷப்பட்ட நாட்களை !
எத்தனை நாள் அழுதிருப்பேன் தெரியுமா ?
முதல் நாள் இரவிலேயே புரிந்துகொண்டேன்
என் வாழ்வு இருண்டுவிட்டது என்பதை ! ’

“ பூக்கள் உனக்கு மிகவும் பிடிக்குமே
ஏன் சூடிக்கொள்ளவில்லை ”

‘ பூக்களை செடியில் வைத்தே ரசிப்பவள் நான்
என்பது உனக்குத் தெரியும் !
ஆனால் என் கணவருக்கோ புகைப்படத்தில் கூட
பூக்கள் பிடிக்காது ஆனால் படுக்கையைத் தவிர ’

“ என்ன பிடிக்கும் அவருக்கு உன்னிடத்தில் ? ”

‘ நான் சம்பாதிக்கும் பணம்
படுக்கையில் அவன் அடையும் சுகம் ’

“ விட்டுக்கொடுப்பதை அதிகம் கற்றுக் கொண்டுவிட்டாயோ ? ”

‘ உன்னையே விட்டுக்கொடுத்த பிறகு
வேறென்ன இருக்கிறது விட்டுக்கொடுக்க ? ’

“ ஏன் இத்தனை அவஸ்தை உனக்கு மட்டும் ?
செத்துக் கூட போய் விடு என் கண்மனியே !
நீ கஷ்டப்படுவதைக் கேட்கும்
என் மனது செத்துக்கொண்டிருக்கிறது… ”

‘ நாம் பிரிந்த போதே
என் உயிரைத் தொலைத்துவிட்டேனடா என் கண்ணாளா !
இப்போதிருப்பது
வெறும் உடல் மட்டும் தான்
அதுவும் நான் பெற்றெடுத்த என் குழந்தைக்காக ! ’

‘சரி விடு என் கதையை
நீ ஏன் இன்னும் இப்படியே ’

“ எனக்கென்ன சந்தோஷமாக வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்
துணைக்கு நிலவும் வானமும் ! ”

‘ நான் உன்னை மிகவும் காயப்படுத்திவிட்டேனடா !
அதனால் தான் எனக்கு இந்த தண்டனை
பெற்றோருக்காக
உன்னைத் தூக்கியெறியத் தயாராக இருந்த எனக்கு,
என் விடுதலைக்காக இவனைத் தூக்கியெறிய தைரியமில்லை ! ’

“ இப்போது வரை தெளிவாக இருந்த என் மனது -
இப்போது ஏனோ
ஒரு கல் எறிந்த குட்டையாய் ! ”

“ நாம் ஏன் சந்தித்தோம் என்றிருக்கிறது எனக்கு ! ”

‘ இந்த சந்திப்பே போதுமென்றிருக்கிறது எனக்கு ! ’

இதற்கு மேல் என்னால் முடியவில்லை !
இதயம் கண்ணீரால் நிரம்பிவிட்டது
நகர்ந்து சென்று விட்டேன் கனத்த மனதுடன் !

காதலில் பிரிவு என்பது கூட
தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்று !
ஆனால் பிரிந்த பின்பு
காதலியை சந்திக்கும் தருணம் இருக்கிறதே,
கொடுமையிலும் கொடுமை !

அவள் மனம் மகிழ்வாக இருந்தால்
அது வரம் !
இல்லையெனில்
அந்த சந்திப்பே சாபம் !

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

நீ !

என்னவள் என்னிடம் கேட்டே விட்டாள், என்னடா எதை எதையோ கவிதையாக எழுதுகிறாய், என்னைப்பற்றி எழுத மாட்டாயா என்று, என்ன சொல்ல முடியும் அவளிடம், அதனால் எழுதப்பட்டது இது!

உன்னை வர்ணித்து கவிதை எழுதவில்லை
என்று குறை பட்டுக்கொள்ளாதே
என் கண்மனியே !
வர்ணித்தலுக்கும் வார்த்தைகளுக்கும்
கட்டுப்படாதது உன் அழகென்பதால்
வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன் !
ஆதலால் உன்னைக் காணும் போது
நான் கொள்ளும் மவுன மொழியே
உனக்கான கவிதை !

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

சுதந்திர போராட்டம்

எங்களுக்கு வேண்டாம் காந்தி பெற்றுக் கொடுத்த
அஹிம்சை சுதந்திரம் !

ரத்தம் சிந்தாமல் பெற்றதனாலோ என்னவோ
இப்போது வாரமொறு முறை என் மக்கள் ரத்தம் சிந்துகிறார்கள் !

மடிந்து விடாமல் கிடைத்ததனாலோ என்னவோ
மனம் மரத்துக் கிடக்கிறது என் மக்களுக்கு,

வாரம் ஒரு குண்டு வெடிப்பு
தினம் ஒரு கொலை கற்பழிப்பு
மணிக்கு ஒரு கொள்ளை. . .

வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்
மாதமொரு முறை வாக்குறுதி அதை நம்பிய ஏமாற்றம் 1

இலவசங்களுக்காக ஏழையாகும் பணக்கார மக்கள்
கணிக்க முடியாத விலை வாசி !

நினைத்து பார்க்க இயலாத அளவில் கல்விக்கட்டணம்
திரும்பிய பக்கமெல்லாம் பிச்சை கேட்கும் குழந்தைகள்

ஏமாற்றும் ஏமாறும் மக்கள்

வாக்குறுதியை மட்டுமே தரும் அரசியல்வாதி
அவனையும் நம்பி மறுமுறையும் ஜெயிக்க வைக்கும் குடிமக்கள்,

பாராளுமன்திறத்தில் பணத்தை கொட்டும் MP
அவனையும் MP ஆக வைத்திருக்கும் ஒரு கட்சி !

உள்நாட்டு கலவரத்தை அடக்க முடியாமல்
அணு ஆயுத ஒப்பந்தம் வேண்டும் ஒரு அரசாங்கம்!

அனைத்தையுமே இலவசமாக்கி,
மக்களை முழு சோம்பேறியாக மாற்றுகிற மாநில அரசுகள் !

சமயம் பார்த்து காலை வாரும் கூட்டணி !
பணம் பதவி புகழ் இதற்காகவே அலைகிற தலைவர்கள் !

ஒடுக்கப்படுகிற மீடியாக்கள்
சமயம் வரும்போது இரட்டை வேடம் போடும் மீடியாக்கள் !

வேண்டாதவன் நல்லதே செய்தாலும்
வேண்டாமென மறுக்கும் மகாத்மாக்கள் !

எவ்வளவு தூரம் ஏய்க்க முடியுமோ
அவ்வளவு தூரம் அரசை ஏமாற்றும் தொழில் அதிபர்கள் !

எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும்
மாணவர்கள் இளய சமுதாயங்கள் !

போட்டியில் கலந்துகொள்ளாமல் ஓய்வு கேட்டுவிட்டு
24 மணிநேரமும் பணத்திற்காக
விளம்பரம் நடிக்கும் விளையாட்டு வீரர்கள் !

கைப்பொம்மையாக இருக்கும் காவலர் பிரிவு !
இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத மக்கள் !

ஒட்டளிக்க வராமல்
காரணம் சொல்லும் படித்த முட்டாள்கள் !

தண்ணீருக்கு சொந்தம் கொண்டாடும்
ஈவிரக்கமற்ற அரசாங்கங்கள் !

ஏன் செய்கிறோம் எதற்காக செய்கிறோம்
என்றே உணராத சினிமா ரசிகர்கள் !

எவன் எக்கேடு கேட்டுப் போனால் எனக்கென்ன
என்று ஊர் மேயும் குடிகாரர்கள் !

விளையாட்டை யுத்தமாகவும்
யுத்தங்களை விளையாட்டாகவும் பார்க்கும் பாமரர்கள் !

சோறு போடும் விவசாயிக்கு
கடன் அட்டை கொடுக்கிறோம் !
கொடுத்த கடனை தேர்தலை முன்னிட்டு
தள்ளுபபடியும் செய்கிறோம் !

எண்ணை நாடுகளுக்கு
கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கிறோம் !

உலகத்திற்கு பூஜ்ஜியததை அறிமுகம் செய்த
ஆரியபட்டனை மறந்துவிட்டோம் !
அவன் ஒரு இந்தியன் என்பதயும் மறந்து விட்டோம் !

நாம் உருவாக்கும் அறிவுப் புதயல்களை
அந்நியனுக்கு விற்றுவிடுகிறோம் !

வேற்றுமையில் ஒற்றுமை என்று முழங்கிக்கொண்டே
மற்ற இனத்தவரை வெறுத்து ஒதுக்குக்கிறோம் !

ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே
இட ஒதுக்கீடுகளை வரவேற்கிறோம் !

உலக நாடுககளிடம் சென்று
கையேந்தி நிற்கிறோம் அறிவியலுக்கு !

இப்போது நினைத்து பார்க்க தோன்றுகிறது
நாம் சுதந்திரம் அடையமலேயே இருந்திருந்தால் ?

ஒரு பயனும் இல்லை நாம் சுதந்திரம் அடைந்தும்
இப்போது நாம் ஆரம்பிக்க வேண்டியது
இரண்டாம் விடுதலைப் போர் -

அஹிம்சை வழி எங்களுக்கு வேண்டாம்
இம்சையின் வலியும் எங்களுக்கு தெரியும்

இப்போது நம்மை ஆட்கொள்ளுவது
ஆங்கிலேயன் அல்ல,
அவன் கற்றுக் கொடுத்த பேராசை !
பேராசையும் பெயரசையும் கொண்ட மனிதர்கள் !

விடுதலை கேட்போம்
இல்லை இல்லை விடுதலை பெறுவோம்
இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்து !

சமுதாயத்தை புரட்டிப் போட்டு
புதிய சமுதாயம் படைப்போம்

எடுத்து வைப்போம் முதல் அடியையே பேரிடியாய்

சமுதாய கோபங்களுக்கு நியாயம் கேட்போம்
அநீதியைக் கண்டால் அடித்து நொறுக்குவோம்

எல்லோரும் ஓட்டளிப்போம்
ஒதுக்கி விடுவோம் உபயோகமில்லாத அரசியல்வாதிகளை
இலவசங்களை மறுப்போம்

எங்களுக்கு மீன் வேண்டாம்
மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள் என கேட்போம்

குழந்தைகளை பள்ளிக்கு மட்டுமே அனுப்புவோம்
உண்மை விளம்புவோம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
அனைவரும் வரி கட்டுவோம்
கற்போம் கற்பிப்போம்

பழயான கழிதலும் புதியன புகுதலும் என்று
ஒரு போகி கொண்டாடி விடுவோம்
இந்த பழய சமுதாயத்திற்கு

எல்லாவற்றிற்கும் மேலாய் மனிதம் வளர்ப்போம்

இது சாத்தியமில்லாமல் இல்லை

அனைத்து கைகளும் ஒன்று சேர்ந்தால்
நிலவயும் பூமிக்கு இழுத்து விடலாம்

நமது அடுத்த தலைமுறை வாழட்டும்
நாம் பெற்றுக் கொடுத்த புதிய சுதந்திர பூமியில் !

புதன், 6 ஆகஸ்ட், 2008

கனவு காணுவோம் சாதனை படைப்போம்

ஆகஸ்டு 6, 1945
ஹிரோஷீமா நாசாமக்கப்பட்ட நாள் !
புல் பூண்டு கூட மிஞ்சவில்லை
உடைந்தது மட்டுமல்ல,
ஊருக்குலைந்தும் போனது ஜப்பான் !
அனைத்தும் புதிதாய் தொடங்கப்பட்டது பூஜ்ஜியத்திலிருந்து !
இப்போது,
கோடிகளை தொட்ட, வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று !

ஆகஸ்டு 15, 1947
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்
அறுபத் தியொரு ஆண்டுகள் ஓடிவிட்டன.
இப்போதும் நாம்
மற்ற நாடுககளிடம் கையேந்தியபடி !

ஏன் இத்தனை வித்தியாசம் ?
என்ன இல்லை நம்மிடத்தில் ?

கஷ்டப்பட்டு பெறப்பட்ட சுதந்திரம்
காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார் !
அப்துல் கலாமின் கனவு கனவாகவே ஆகிவிடுமோ ?
எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ?
ஏன் நமது ஒவ்வொரு அடியும்
நாட்டின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைக்கப்படவில்லை ?
இன்னும் எத்தனை நாட்கள்
வெளிநாட்டு வேலைக்கு மோகம் கொண்டு அலையப் போகிறார்கள்
நம் இளைஞர்கள் ?
சுய முன்னேற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும்
வளர்ச்சி போதவில்லை !
எதற்காக இன்னும்
அடுத்தவனை பார்த்தே சூடு போட்டுக்கொள்ள வேண்டும்?
என்ன இல்லை இங்கே ?
ஏன் போகவேண்டும் கடல்கடந்து ?

கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு
நமக்கு நாமே பதிலளிக்க பழகுவோம்,

இப்போதாவது சபதம் எடுப்போம்
நமது பாரதத்திற்காகவே பாடுபடுவோம் என்று!

நாம் அனைவரும் சுய நலவாதிகள் தான்,
சுய நலத்தை கொஞ்சம் பெரியதக்கிக் கொள்வோம்

என் வீடு என் நிலம் என் பணம்
என்று நினைப்பதை மறந்துவிட்டு,
என் நாடு என் மக்கள்
இந்த நாட்டின் முன்னேற்றம் என் முன்னேற்றம்
என்ற நினைப்பை உருவாக்குவோம் !

நாம் கண்டுபிடித்த அறிவியலை -
முதலில் நமக்கு பயன் படுத்துவோம்,
இப்போது சுய நாலாவதியாய் இருப்போம் !

வளர்ந்து செல்வோம் வானை முட்டுமளவிற்கு !
வானம் தலையில் தட்டும்போதும் குனிந்து விட வேண்டாம் !
உயரே தள்ளிவிடுவோம் வானத்தை,
கனவு காணுவோம் சாதனை படைப்போம் !

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

காரணம்

என் மேல் விழுந்து கொண்டு
என்னை விடுடா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

ஏதோ ஓர் அடிப்பட்ட அணிலுக்காக
கடவுளிடம் சண்டையிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எனக்கு தாகம் எடுக்கும்போது
நீ தண்ணீர் குடிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எனக்கு பிடித்த பாடல்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது
எங்கிருந்தாலும் எனக்கு தெரிவிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

சற்றும் எதிர்பாராத வேளையில் வந்து
என் வீட்டு கதவு தட்டுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

இரவு முழுவதும் உன் அழைப்புக்காக காத்திருப்பேன்
காலையில் வந்து சாரிடா தூங்கிட்டேன் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கோவிலுக்கு செல்லும்போது கூட
என்னை குழந்தை போல் அலங்கரிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை முத்தமிடும்
என் அக்காவின் குழந்தையை
உனக்கு போட்டியாக எண்ணுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன்னை பெயர் சொல்லி அழைக்கும் போது
திரும்பாமலேயே இருந்து விட்டு
மூன்று முறை அழைத்த பின்
இதற்காக தான் திரும்பவில்லை என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை கண்ணா என்று அழைத்து
ராமனாக இருடா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உனக்கு பிடித்த என் நீலக்கலர் சட்டையை
எப்போதுமே அணிந்து கொள்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை ஏன் காதலிக்கிறாய்
என்று நான் கேட்டால்
அதாண்டா ஏமாந்துட்டேன் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எப்போதும் அலுவலகத்திற்கு செல்லும்போது
உன் நெற்றிப் பொட்டால் எனக்கு திலகமிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன் அப்பாவுக்கு சட்டை எடுக்கும்போது கூட
என்னை தேர்ந்தெடுக்க சொல்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கள்ளிக் காட்டு இதிகாசத்தின்
ஒரு வரியை நான் சொல்ல அடுத்த வரியை
நீயே விவரிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் உறங்க ஆரம்பிக்கும்போது
என் நெற்றியில் முத்தமிட்டு செல்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை தூங்க வைக்க வேண்டுமென்று
சொல்லிக்கொண்டே தூங்கிவிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கடை வீதிக்கு உன் அம்மாவுடன் வரும்போதும்
என் அம்மாவை பார்த்து கண்களாலே புன்னகைப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என் அம்மா அப்பாவை
நம்ம அம்மா அப்பா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன்னை குழந்தையாக மாதிரி
தூக்கி கொஞ்சவேண்டும் என்று சொல்லி
மடியில் வைத்து கொஞ்சுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை முதன் முதலில் நண்பனுக்கும் மேலானவன்
என்று உன் வீட்டில் அறிமுகம் செய்து வைத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உனக்கு பிடிக்காதென்றாலும்
கல்லூரியில் நான் பாடிய பாடல் என்பதால் ரசிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

அடுத்த பெண்ணைப் பற்றி விசாரிக்கையில்
பொய் கோபத்துடன் கிள்ளுவயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் முதன் முதலில் தொட்ட
உன் வலது கைதான் பிடிக்கும் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் தாகமாயிருக்கு என்று சொல்லும்போது
நீ தண்ணீர் குடிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

பேசிக்கொண்டே இருந்த எனக்கு
உன் மௌன மொழியை கற்றுக்கொடுத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எப்போதும் என்னை சந்திக்கும்போது
என் தோள் சாய்ந்து கண் மூடுவயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

வண்டியில் செல்கையிலே
பார்த்துப் போடா என்று
செல்லமாக குட்டுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் சமைக்க ஆரம்பித்தவுடன்
எனக்கு கட்டளைகள் இட ஆரம்பிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் உன் வீட்டு தொலைபேசியில்
ஐ லவ் யூ என்று சொல்லும்போது
நானும் தான் என்று வழிவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை ஏன் காதலிக்கிறாய்
என்று கேட்டு என்னை
இத்தனை எழுத வைத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நம்மை பெற்றவர்களை நம் காதல்
அழவைக்க கூடாது என்பதால்
நாம் பிரிந்து விடுவோம்
என்று சொன்னாயே நம் கடைசி சந்திப்பின் போது
அதனால் தானடி உன்னை நான் இன்னும் காதலிக்கிறேன் !

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

காக்கி டவுஸரும் வெள்ளை சட்டையும் போட்டுக்கொண்டு
சைக்கிளில் ஸ்கூல் சென்ற நாட்களில்
ஆரம்பித்தது இந்த நட்பு !
ஒன்றாக சைக்கிளில்
இரண்டு மைல் தூரம் மிதித்து பள்ளி சேர்வோம்
மதிய வேளையில்
ஒரே தட்டில் பள்ளிக்கூட சத்துணவு !
ஒன்றாக ஊர் சுற்ற வும்
கட்டியணைத்து வாழ்த்து பரிமாறவும் எப்போதுமே மறந்ததில்லை
ஆனால் இப்போது,
தங்கியிருக்க தனி அபார்ட் மெண்ட்
சென்று வர கார்
எப்போதும் ஆன் லைன்
ஆனாலும் மறந்து விடுகிறது,
இப்போது அனைத்து வாழ்த்துக்களும் முடிந்து விடுகிறது . . .
ஒரு பார்வர்ட் மெயிலாய் !

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

சனி, 2 ஆகஸ்ட், 2008

மறக்க முடியவில்லை

எப்போதும்
உன்னையே நான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாய்
ஆனால் -
திருமணமாகி செல்கிறாய் என் கண் முன்னே !
இப்போதும் நான் உன்னையே நினைத்துக் கொண்டு
என் மணவறையில்!

வேண்டாம்

எதிரியும்
என் நிலை அடைய வேண்டாம் -
கணவனை தேர்ந்தெடுக்க சொல்லும்
காதலி!

ஏமாற்றம்

என்னை ஏமாற்றிவிடமாட்டாயே !
நான் முத்தமிடும்போது கேட்ட என் காதலி
என் முன்னால் இப்போது
அவள் கணவனுடன் !

தாமதம்

நான் நனைய சென்ற போது
நின்று போன மழை . . .
கை நீட்டுகையில்
தீர்ந்து போனகோவில் பிரசாதம். . .
காக்கவிரைந்த போது
அணைந்து போன மெழுகுவர்த்தி. . .
பேசமுனைந்த போது
அடுத்தவரின் தொலைபேசி அழைப்பு. . .
இவையெல்லாம் எச்சரிக்கை மணிகளோ
நான் மணமுடிக்க நினைந்தபோது
மணமகனுடன்
என் காதலி !

வலி

என் கண்மணியே,
"உன்னை பிடிக்கவில்லை" என்ற உன் சொல்
என் இதயத்தைக் கீறியது உண்மை தான் !
ஆனால்,
உன் நினைவுகளை என் இதயம் சுமப்பதால்
காயம் வடுவகியது . . .
ஆனாலும் பெண்ணே !
தழும்புகளுக்குத்தான் தெரியும்
காயத்தின் வலி !

கண்ணீர்

நீ என்னைப் பிரிந்தாலும்
நான் அழுவதில்லை . . .
என் கண்களில் உள்ள உன் பிம்பத்தை
கண்ணீர் காயப்படுத்திவிட்டால்
என்ன செய்ய?

உன் நினைவுகள்

தூக்கம் தொலைந்த இரவுகள்
அருகில்
நீ இல்லா வெறுமை !
ஆனாலும்
விழி நனைய
இதயம் இனிக்க
உன் நினைவுகள் !

சிற்பம்

ஒரு கல்லைக் கூட
சிற்பமாக காட்டிய நீ !
ஏன்
உனது மனதை மட்டும்
கல்லாகவே காட்டுகிறாய் ?

திருப்பிக்கொடு

எனக்கும் உனக்கும்
இனி ஒன்றுமில்லை என்ற என் கண்மணியே !
நான் உன் கணவனில்லை -
உன் சரீரத்தை நீயே வைத்துக்கொள்!
நான் உன் காதலனில்லை -
உன் இதயத்தை நீயே வைத்துக்கொள்!
நான் உன் நண்பனில்லை -
உன் புன்னகையை நீயே வைத்துக்கொள்!
ஆனாலும்,
நான் நான் தான் . .
என்னை மட்டும்
எனக்கு திருப்பிக்கொடுத்துவிடு !
இனிமேலாவது நான் நானாக இருப்பதற்காக. . .

அறியாமை

நட்டு வைத்த ரோஜா செடிக்குக் கூட
உயிர் மண் தேடிய நீ,

உன்னை மட்டுமே மனதில் நட்டு வைத்த என்னை
"வேண்டாம்" என
விலகிச்செல்கிறாயே !
நீதான் என் உயிர் என்பதை அறியாமல் . . .

குடை - பிணம்

அன்று ஓர் மழை நாளில்,
உனக்காக நானும் எனக்காக நீயும்
ஒரே குடையின் கீழ்
நனைந்து கொண்டே சென்றோம் . . .
இன்று,
மழையில் நனையும் எனக்கு
குடை நீட்டுகிறாய் உன் கணவனுடன்!
ஆயிரம் குடை தந்தென்ன கண்மணி
பிணம் எப்படிப் போனாலென்ன?
எத்தனை முறை பேச முயன்ற போதும்
என்னைத் தவிர்த்து விட்ட நீ,

நீயாக வந்து என்னிடம் -
"உன்னிடம் பேசுவதை விட
அவனுடன் பேசும்போது தான்
சந்தோஷமா இருக்கு" என்றாயே . . .

அப்போதே இறந்து விட்டேனடி நான்

இப்போது வந்து
"எப்படி இருக்கிறாய்" என்று கேட்காதே !

வியாழன், 31 ஜூலை, 2008

முகவரி இல்லாத கடிதம்

உன்னை பார்த்த முதல் நாள் நான் உணர்ந்தேன் என் பிறப்பிற்கான அவசியத்தை
எத்தனை முறை உன்னைப் பார்த்த போதும்
என்
மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி!
உன்னைப் பார்க்காத போதும் தான்
பார்க்கும் போது மனத்திற்குள்
பார்க்காத
போது வெளியில் அலைந்து திரிந்தபடி . . .
உன்னைப் பார்த்து நாட்கள் பல ஆகிவிட்டன
மனது மட்டும் உன் நினைவிலேயே நின்றுகொண்டிருக்கிறது !
இந்த கடிதத்தை படித்து விட்டாவது என் முன்னால் வா !
மற்ற முகங்களை பார்க்க மறுக்கும்
என்
கண்களுக்கு சொல்லி விட்டு போ
இப்போது
-
உன் கண்கள் பார்ப்பதற்கு வேறொரு கண்கள் உள்ளதென்று
உன் குரலை கேட்பதற்கு மற்றொரு செவிகள் உண்டென்று
உன் மனத்தை கொள்ளை இடுவதற்கு மற்றொரு மனம் உள்ளதென்று
இப்போதாவது என் மனது என்னிடம் திரும்ப வரட்டும்!
இப்போது கடிதத்தை அனுப்புகிறேன்
முகவரி தெரியாத உன் மனதிற்கு...

புதன், 30 ஜூலை, 2008

என் ஜன்னல் தொட்டுப்போன வண்ணக்கிளி

என் கண்ணெதிரே நடந்த சம்பவம், ஆனால் அங்கு வரவில்லை என் ஜன்னல் தொட்டுப்போன வண்ணக்கிளி
வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

கிளியும் நானும்

வியாழன், 17 ஜூலை, 2008

நான் - என்னைப்பற்றி...

நான் பட்டிக்காட்டான். தென்னிந்தியாவில் அதுவும் தென்தமிழகத்தின் தெற்கு மூலையில் ஒன்றான சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அருகில் பிறந்தவன் நான்.
ஒரு அழகான கிரமமும் இல்லாமல் ஆடம்பரமான நகரமும் இல்லாமலிருக்கும் என் சொந்த மண்.
இந்த மண்ணுடன் பிறந்ததினாலோ என்னவோ அழகாகவும் இல்லை ஆடம்பரமாகவும் இருக்க இயலவில்லை என்னால். பட்டிக்காட்டு பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறேன். அதனாலேயே நான் பட்டிக்காட்டான்..
மண்ணாசை பிடித்தவன், துரியோதனனின் ஆசையல்ல, மண் மீதான மரியாதை, மண் மதிக்கும் மாண்பு
எங்கும் செல்ல விரும்பவில்லை நான் இந்த மண்ணை விட்டு.
உலகத்தை நேசிக்கிறேன், இயற்கையை நேசிக்கிறேன், நிகழ்வுகளை நேசிக்கிறேன், என்னையும் நான் நேசிக்கிறேன்
இங்கு நான் எழுதியிருப்பது அனைத்தும் என் என்ணங்கள் மட்டுமே
பெண்ணைக் காதலிப் பதை விட மண்ணைக் காதலிப்பதே மேல் என்று எண்ணுகிறேன் நான்
நிறைய நாட்களாக என் மனதில் ஒரு வெற்றிடம்
எப்போதுமே வெற்றிடம் தான் இடைவெளி தான் எல்லாவற்றிலுமே
வெற்றிடத்தை நிரப்பக்கி டைத்தது ஓர் ஆயுதம்
ஆயுதத்தை எடுத்துப் பார்க்கையில் வைப்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கிறேன். ஆயுதத்தை எடுத்து சுழற்றும் போதுதான் எத்தனை ஆனந்தம்? உலகமே தெரியாது அனைத்துமே மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தோன்றும். அவ்வப்போது கீறல்கள் ஏற்படுவதும் சகஜம் தான். ஆனால் ஒரு நாள் எனது ஆயுதத்தை தொலைத்துவிட்டேன், தொலைத்து விட்டேனா இல்லை களவு கொடுக்கப்பட்ததா என்பது அந்த ஆயுதததிற்கே வெளிச்சம். மீண்டும் இங்கே வந்து நிரம்பியது வெற்றிடம். எதனாலும் நிரப்ப முடியவில்லை அந்த வெற்றிடத்தை, அனைத்தும் ஆயுதத்தின் கறை படிந்த ரத்தமாய்.
அந்த வெற்றிடம் - என் வாழ்க்கை
அந்த ஆயுதம் - என் காதல்
அந்த கறை படிந்த ரத்தம் - என் காதலி(யி)ன் நினைவுகள்

என் மனத்தில் தோன்றிய அனைத்தையும் எழுதுகிறேன்.
நான் விரும்புவதெல்லாம் ஒரு அங்கீகரீக்கப்பட்ட எழுத்தாளனாக வரவேண்டும் என்பதுதான்.
உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள், எனதாசை நிறைவேற.