செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

வரமா சாபமா?

என்ன ஒரு தருணம் இது
வரமா சாபமா?

நான் என் காதலியைக் காண்கிறேன்
பத்து வருடங்கள் கழித்து
எங்களது கண்கள் சந்தித்துக் கொண்டதும்
மனங்கள் பரிமாற ஆரம்பித்துவிட்டன உள்ளக்குமுறல்களை

“ எத்தனை வருடங்கள் ஓடி விட்டன
நம் கண்கள் சந்தித்து
எங்கிருந்தாய் எப்படியிருந்தாய்
எதுவுமே தெரியாமலேயே ” - நான்

“ உன்னுடன் வருபவர் யார்
அவர்தான் உன் கணவரா ”

‘ஆம், அவனைத்தான் உனக்குப் பதிலாக
என்னிடம் பிடித்துக்கொடுத்தனர் என் பெற்றோர்
நாவிலே நஞ்சுள்ளவன் !
சந்தேகத்தின் சகோதரன்! ’ - அவள்

“ என்ன ஆயிற்று உனக்கு?
மனதை ஒருமுகப்படுத்து !
யாரது உனது கையைப்பிடித்துக் கொண்டு
உன் குழந்தையா?
உன் ஜாடையிலேயே உள்ளதே ! ”

‘ ஆம் இவள் என் மகள் ’

“ தேவதை பெற்றெடுத்த திருமகள் ”

‘ எனக்கும் இந்த மாமிச மிருகத்தின்
உறவுக்கும் சாட்சி ’

“ என்ன இது
வாழ்க்கையை வெறுத்தது போல் பேசுகிறாய் ”

‘ வெறுத்தது வாழ்க்கையை மட்டுமல்ல
அனைத்தையும் தான்
உன்னைத்தவிர !
சரி விடு என் கதையை,
எங்கே உனது துணை ? ’

“ எனக்குத் துணையா?
என்ன வேண்டும் எனக்கு,
உன் நினைவுகளைத் தவிர ?
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளுடனேயே ! ”

‘ நானும் தான்
உன் நினைவுகளின் சந்தோஷங்களில்
கொஞ்ச நாள் வாழ்ந்துகொண்டிருந்தேன் !
இப்போது நினைத்துப் பார்த்தால்
விரல் விட்டு எண்ணி விடலாம்
சந்தோஷப்பட்ட நாட்களை !
எத்தனை நாள் அழுதிருப்பேன் தெரியுமா ?
முதல் நாள் இரவிலேயே புரிந்துகொண்டேன்
என் வாழ்வு இருண்டுவிட்டது என்பதை ! ’

“ பூக்கள் உனக்கு மிகவும் பிடிக்குமே
ஏன் சூடிக்கொள்ளவில்லை ”

‘ பூக்களை செடியில் வைத்தே ரசிப்பவள் நான்
என்பது உனக்குத் தெரியும் !
ஆனால் என் கணவருக்கோ புகைப்படத்தில் கூட
பூக்கள் பிடிக்காது ஆனால் படுக்கையைத் தவிர ’

“ என்ன பிடிக்கும் அவருக்கு உன்னிடத்தில் ? ”

‘ நான் சம்பாதிக்கும் பணம்
படுக்கையில் அவன் அடையும் சுகம் ’

“ விட்டுக்கொடுப்பதை அதிகம் கற்றுக் கொண்டுவிட்டாயோ ? ”

‘ உன்னையே விட்டுக்கொடுத்த பிறகு
வேறென்ன இருக்கிறது விட்டுக்கொடுக்க ? ’

“ ஏன் இத்தனை அவஸ்தை உனக்கு மட்டும் ?
செத்துக் கூட போய் விடு என் கண்மனியே !
நீ கஷ்டப்படுவதைக் கேட்கும்
என் மனது செத்துக்கொண்டிருக்கிறது… ”

‘ நாம் பிரிந்த போதே
என் உயிரைத் தொலைத்துவிட்டேனடா என் கண்ணாளா !
இப்போதிருப்பது
வெறும் உடல் மட்டும் தான்
அதுவும் நான் பெற்றெடுத்த என் குழந்தைக்காக ! ’

‘சரி விடு என் கதையை
நீ ஏன் இன்னும் இப்படியே ’

“ எனக்கென்ன சந்தோஷமாக வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்
துணைக்கு நிலவும் வானமும் ! ”

‘ நான் உன்னை மிகவும் காயப்படுத்திவிட்டேனடா !
அதனால் தான் எனக்கு இந்த தண்டனை
பெற்றோருக்காக
உன்னைத் தூக்கியெறியத் தயாராக இருந்த எனக்கு,
என் விடுதலைக்காக இவனைத் தூக்கியெறிய தைரியமில்லை ! ’

“ இப்போது வரை தெளிவாக இருந்த என் மனது -
இப்போது ஏனோ
ஒரு கல் எறிந்த குட்டையாய் ! ”

“ நாம் ஏன் சந்தித்தோம் என்றிருக்கிறது எனக்கு ! ”

‘ இந்த சந்திப்பே போதுமென்றிருக்கிறது எனக்கு ! ’

இதற்கு மேல் என்னால் முடியவில்லை !
இதயம் கண்ணீரால் நிரம்பிவிட்டது
நகர்ந்து சென்று விட்டேன் கனத்த மனதுடன் !

காதலில் பிரிவு என்பது கூட
தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்று !
ஆனால் பிரிந்த பின்பு
காதலியை சந்திக்கும் தருணம் இருக்கிறதே,
கொடுமையிலும் கொடுமை !

அவள் மனம் மகிழ்வாக இருந்தால்
அது வரம் !
இல்லையெனில்
அந்த சந்திப்பே சாபம் !

கருத்துகள் இல்லை: